மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

தூத்துக்குடி அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள அண்ணா நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 36). இவரது மனைவி டென்சி ராணி. ராஜேஷ்குமார் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. டென்சி ராணி தனது கணவருக்கு ரூ.6 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ராஜேஷ் குமாருக்கும், சாயர்புரம் நட்டாத்தி பகுதியை சேர்ந்த பிரின்சி அன்ன செல்வமேரி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரை தனது முதல்-மனைவிக்கு தெரியாமல் ராஜேஷ்குமார் 2-வதாக திருமணம் செய்துள்ளார். தற்போது பிரின்சி அன்னசெல்வமேரி தூத்துக்குடியில் உள்ள நேதாஜி நகரில் குடியிருந்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்குமார் மூலமாக ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ராஜேஷ்குமார் 2-வது திருமணம் செய்து கொண்டது டென்சிராணிக்கு 25-8-19-ந்தேதி தெரியவந்தது. உடனே இது குறித்து டென்சிராணி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜேஷ்குமார் தனது 2-வது மனைவியுடன் வெளியூர் சென்றது தெரியவந்தது. இந்நிலையில் ராஜேஷ்குமார் முதல் மனைவி டென்சி ராணியிடம் சென்று நீ கொடுத்த ரூ.6 லட்சத்தை திருப்பி தந்துவிடுகிறேன் எனக்கு விவாகரத்து அளிக்க வேண்டும் என்று கூறி, கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியுள்ளார்.

இதற்கு ராஜேஷ்குமாரின் தாயார் பார்வதி உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து டென்சிராணி மேலும் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com