உ.பி. முதல்-மந்திரி ஆதித்யநாத் மீதான வழக்குகள் வாபஸ்

உத்தரப் பிரதேச சட்டசபையில் கிரிமனல் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.
உ.பி. முதல்-மந்திரி ஆதித்யநாத் மீதான வழக்குகள் வாபஸ்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அவர் பதவி ஏற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளும், சீர்திருத்தங்களும் எடுத்து வருகிறார். இதனால் அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது உத்தரப்பிரதேச சட்டசபையில் புதிய சட்ட திருத்த மசோதா ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் உத்தரப்பிரதேச கிரிமினல் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள அரசியல் ரீதியான 20,000 வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

இந்த சட்ட மசோதா தாக்கலான மறுநாளே மாநில சட்டத்துறை செயலாளர் கோரக்பூர் கலெக்டருக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

அதில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது 22 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளையும், மத்திய மந்திரி ஷிவ்பிரதாப் சுக்லா, பா.ஜனதா எம்.எல்.ஏ. ஷீதல் பாண்டே உள்பட பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 2015-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை நிலுவையில் உள்ள அனைத்து அரசியல் தொடர்பான வழக்குகளையும் படிப்படியாக வாபஸ் பெறுமாறு கூறப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் அரசியல் போராட்ட காலங்களில் போடப்பட்ட சாதாரண வழக்குகள் ஆகும். இதன்மூலம் மாநிலம் முழுவதும் அரசியல்வாதிகள் மீதான நிலுவையில் உள்ள 20,000 வழக்குகள் வாபஸ் ஆகிறது.

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கோரக்பூர் கோவில் மடாதிபதி ஆவார். இந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போது அதை மீறியதாக முந்தைய ஆட்சியின் போது யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதேபோல் சர்ச்சைக்குரிய வகையில் மதம் தொடர்பான பேச்சுக்களுக்கும் அவர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகள் எல்லாம் ரத்தாவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com