மறைந்த எழுத்தாளர் ஞாநியின் உடல் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது

மறைந்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஞாநியின் உடல், சென்னை ராஜிவ் காந்தி அரசுமருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
மறைந்த எழுத்தாளர் ஞாநியின் உடல் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது
Published on

பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தவர் ஞாநி. இவரது முழு பெயர் ஞாநி சங்கரன்.

கடந்த சில மாதங்களாக அவர் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவர் வீட்டில் இருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 63.

அவரது உடல் கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்களும், கட்சி பிரமுகர்களும், பத்திரிகையாளர்களும் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த ஞாநியின் தந்தை வேம்புசாமி. பத்திரிகையாளராக திகழ்ந்த அவருக்கு 1954-ம் ஆண்டு செங்கல்பட்டில் ஞாநி பிறந்தார். தந்தையை போல ஞாநியும் ஊடகத்துறையில் நுழைந்து பணியாற்றினார்.

1980-களின் இறுதியில் போபர்ஸ் பீரங்கி ஊழல் நாட்டையே உலுக்கிய போது முரசொலியில் புதையல் எனும் பகுதியில் அது தொடர்பான தகவல்களை ஞாநி விரிவாக எழுதினார். பிறகு வேறு பத்திரிகைகளில் அவரது கட்டுரைகள் இடம் பெற்றன. இதையடுத்து தொலைக்காட்சி விவாதங்களிலும் அவர் பங்கேற்று பேசி வந்தார்.

ஞாநிக்கு பத்மா என்ற மனைவியும், மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளார். மனுஷ்நந்தன் திரைத்துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

மறைந்த ஞாநியின் உடலுக்கு இன்று பிற்பகல் 4 மணிக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. அதன்பிறகு அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com