

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்துவரும் நிலையில், இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மிகப்பெரிய டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது. நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் தொடர் தாக்குதலை நடத்தியது.
ஒரே இரவில் பல்வேறு இடங்களில் உக்ரைனின் 555 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இதில் மாஸ்கோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 180 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.
ஆனால் மாஸ்கோவின் கபோட்னியா பகுதியில் உள்ள ரஷ்யாவின் பிரம்மாண்டமான காஸ்ப்ரோம் நெப்ட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் ட்ரோன்கள் துல்லியமாக மோதித் தாக்கின. இதில் அங்குள்ள தொட்டிகள் வெடித்து சிதறி தீப்பிடித்தன.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இந்த வாரத்தில் மட்டும் இந்த ஆலைமீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது உக்ரைன். இதனால் அதன் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. அதேபோல் ரஷ்யாவின் மிகப்பெரிய வணிக வளாகமான சடோவோட் வர்த்தக மையம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது. டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து மாஸ்கோவில் உள்ள நான்கு விமான நிலையங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ரஷ்ய போக்குவரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோ மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது நியாயமான பதிலடி என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.