39 வயதில் நோவக் ஜோகோவிச்சின் உடற்தகுதி.. வெளியான முக்கிய தகவல்!

பிரெஞ்சு வீரரை வீழ்த்தி ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.
Novak Djokovic French Open fitness update
Novak Djokovic French Open fitness update
Published on

உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ரோலண்ட் கரோஸ் மைதானத்தில் நேற்று (மே 24.2026) முதல் சுற்று நடைபெற்றது.

முதல் சுற்றில் ஜியோவானிம்பெட்சி பெரிகார்ட், நோவக் ஜோகோவிச் ஆகியோர் களமிறங்கினர்.

இதில், 25-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றும் நோக்கில் நோவக் ஜோகோவிச் விளையாடினார். 39 வயதான ஜோகோவிச், நடப்பு சீசனில் தனது 4-வது பெரிய தொடரில் விளையாடுகிறார்.

நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் பிரெஞ்சு நாட்டின் இளம் வீரரான ஜியோவானிம்பெட்சி பெரிகார்ட்டை (உலகத் தரவரிசையில் 80-வது இடம்) ஜோகோவிச் எதிர்கொண்டார்.

உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவோடு விளையாடிய பெரிகார்ட், மணிக்கு 223 கி.மீ வேகத்தில் அசுரத்தனமான சர்வீஸ்களை செய்து ஜோகோவிச்சிற்கு முட்டுக்கட்டை போட்டார். இதனால் ஜோகோவிச் தனது முதல் செட்டை 5-7 என்று ஆடி ஆட்டமிழந்தார்.

இருப்பினும், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச், அடுத்தடுத்த செட்களை 7-5, 6-1, 6-4 எனத் தன்வசப்படுத்தி, 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் மாபெரும் வெற்றியைப் பெற்றார்.

போட்டியின் போது பிரெஞ்சு ரசிகர்கள் ஜியோவானிம் பெட்சிக்கு ஊக்கமளித்தனர். அதற்குப் பதிலடியாக, ஆட்டத்தின் முக்கியப் புள்ளியை வென்ற ஜோகோவிச், ரசிகர்களை வம்பிழுத்துள்ளார். பிறகு மைதானத்திலேயே மகிழ்ச்சியில் நடனமாடி தனது வெற்றியைக் கொண்டாடினார்.

வெற்றிக்கு பிறகு பேசிய ஜோகோவிச், தற்போதைக்கு தனது உடல்நிலை நன்றாகவே ஒத்துழைப்பதாக தெரிவித்தார். 39 வயதில் இந்த 3 மணி நேரப் போட்டி, மருத்துவர் பரிந்துரைத்த சரியான உடற்பயிற்சி போல அமைந்தது என நகைச்சுவையாகக் கூறினார்.

மேலும், தனது டென்னிஸ் வாழ்க்கையிலேயே எதிர்கொண்ட கடினமான சர்வீஸ்களில் மிக சிறந்த வீரர் என்று பெரிகார்ட்டினை பாராட்டினார்.

2026 பிரெஞ்சு ஓபன் தொடரின் மூலம், இத்தொடரில் அதிக முறை (22 முறை) பங்கேற்ற ஆண்கள் சாதனைப் பட்டியலில் ஜோகோவிச் இணைந்துள்ளார்.

கடந்த 20 பிரெஞ்சு ஓபன் தொடர்களில் 19 முறை அவர் குறைந்தது கால் இறுதி வரை முன்னேறியுள்ளார் என்பதும், இதற்கு முன்பு 2016, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com