

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்க முயல்வதாக கூறி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 அன்று அந்நாடு மீது தாக்குதலை தொடங்கியது.
ஈரானும் பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் தாக்கியது. மேலும் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கிய கடல்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது.
இதனால் உலக நாடுகள் எரிபொருள் நெருக்கடியில் சிக்கின. இது அமெரிக்காவுக்கும் அழுத்தமாக அமைந்தது.
போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமுயற்சி எடுத்தார். இடையில் ஏப்ரல் 8 தற்காலிக போர் நிறுத்தம் இருந்தபோதிலும் அமைதி உடன்படிக்கை எட்டுவதில் இழுபறி நீடித்தது.
இந்த சூழலில் ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. மின்னணு முறையில் தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் வரும் வெள்ளிக்கிழமை இந்த உடன்படிக்கை முறைப்படி கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
இந்த உடன்படிக்கையில் உள்ள அமசங்கள் குறித்த விவாதம் தற்போது எழுந்துள்ளது.
ஒப்பந்தப்படி "ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என ஒப்புக்கொண்டுள்ளது" என்று அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அவரது ட்ரூத் சோஷியல் பதிவில், "ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதத்தை தயாரிக்க மாட்டோம் என்பதில் உடன்பட்டுள்ளது! மேலும், ஈரானுக்கு அமெரிக்கா 300 மில்லியன் டாலர் பணம் தருவதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய் செய்தி. இதனை ஜனநாயகக் கட்சியினர் பரப்பி வருகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 3 மாத கால போரில் தாங்கள் சந்தித்த இழப்புகளுக்கு ஈரான் குறைந்தது 300 பில்லியன் டாலர் இழப்பீடு தர வேண்டும் என கோரியிருந்தது. மேலும், வெளிநாடுகளில் முடக்கப்பட்ட தங்களின் 24 பில்லியன் டாலர் சொத்துக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இந்நிலையில் ஒப்பந்தத்தில் ஈரானுக்கு அமெரிக்கா 300 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் டிரம்ப் அதை மறுத்துள்ளார்.
மறுபுறம் இது இழப்பீடாக அல்லாமல் ஈரான் மீதான தடைகளை தளர்த்தி சர்வதேச நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அங்கு முதலீடு மேற்கொள்ள வழிவகை செய்வதன் மூலம் அமெரிக்கா உதவலாம் எனவும் ஊகங்கள் எழுந்துள்ளன.
தற்போது கையெழுத்தாகியுள்ள தற்காலிக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறுகையில்,
"ஈரான் தங்களின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை அழிப்பதற்கும், அதன் எதிர்கால யுரேனியம் செறிவூட்டல் திட்டங்களை அமெரிக்காவின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளது.
சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வாளர்கள் மீண்டும் ஈரானுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஈரான் தனது வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றினால் மட்டுமே, அதன் மீதான அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் ஏற்றுமதி தடைகள் படிப்படியாக நீக்கப்படும்.
ஹிஸ்புல்லா உள்ளிட்ட பிராந்திய தீவிரவாத அமைப்புகளுக்கு ஈரான் வழங்கும் ஆதரவை நிறுத்த வேண்டும் என்பதும் அமெரிக்காவின் முதன்மை நிபந்தனையாகும்" என தெரிவித்தார்.