search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பில் கேட்ஸ்
    X
    பில் கேட்ஸ்

    பாலியல் குற்றவாளியுடன் நட்பு வைத்தது மிகப்பெரிய தவறு- பில் கேட்ஸ் வருத்தம்

    பில் கேட்ஸ்- மெலிண்டா தம்பதியின் விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதில் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் பில் கேட்ஸ் நட்பு வைத்து இருப்பதும் ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    நியூயார்க்:

    உலக பணக்காரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர் பில் கேட்ஸ். இவர் தனது மனைவி மெலிண்டா கேட்சுடன் இணைந்து தொண்டு அறக்கட்டளையை நிறுவி பல்வேறு நாடுகளுக்கு உதவி வருகிறார்.

    இதற்கிடையே கடந்த மே 3-ந் தேதி பில் கேட்ஸ்- மெலிண்டா கேட்ஸ் தம்பதி விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது. 27 ஆண்டு கால திருமண உறவு முடிவுக்கு வருவதாகவும், தொண்டு அறக்கட்டளையில் இருவரும் தொடர்ந்து இணைந்து செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அவர்களுக்கு நேற்று முன்தினம் வாஷிங்டன் மாகாண கிங் நகர நீதிமன்றம் சட்டப்படி விவாகரத்து வழங்கியது.

    பில் கேட்ஸ்- மெலிண்டா தம்பதியின் விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதில் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் பில் கேட்ஸ் நட்பு வைத்து இருப்பதும் ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெப்ரி எப்ஸ்டீனை பில் கேட்ஸ் அடிக்கடி சந்தித்து வந்ததாக மெலிண்டா கருதினார் என்று தகவல் வெளியானது.

    ஆனால் அதை மறுத்த பில் கேட்ஸ் தரப்பினர், சமூக சேவைக்காக மட்டுமே ஜெப்ரி எப்ஸ்டீனை பில் கேட்ஸ் சந்தித்ததாகவும், அதற்காக பில் கேட்ஸ் வருத்தப்பட்டார் என்றும் தெரிவித்தனர்.

    ஜெப்ரி எப்ஸ்டீன் 2019-ம் ஆண்டு சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பில் கேட்ஸ் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

    நான் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் நட்பு வைத்திருந்தது மிகப்பெரிய தவறு. அவருக்கு இருந்த தொடர்புகள் மூலம் தொண்டு நிறுவனத்துக்கு நிதி கிடைக்கும் என்று நம்பி அவரை சந்தித்தேன்.

    அது நிறைவேறாது என்று தெரியவந்த போது ஜெப்ரி எப்ஸ்டீனுடன் இருந்த நட்பு முடிவுக்கு வந்தது. ஆனால் அவருடன் நேரத்தை செலவழித்தது மிகப்பெரிய தவறாக அமைந்துவிட்டது. நான் தவறு செய்துவிட்டேன். மெலிண்டாவுடன் விவாகரத்து ஆனது நிச்சயமாக ஒரு சோகமான மைல்கல்.

    அறக்கட்டளையில் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்றுவோம். மெலிண்டா நம்ப முடியாத பலங்களை கொண்டுள்ளார். அது அறக்கட்டளை சிறப்பாக செயல்பட உதவுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×