

ஹம்பர்க்:
19-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரை நடக்கிறது.
10 வகையான உடல் எடைப்பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் 85 நாடுகளை சேர்ந்த 280 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்தியா சார்பில் அமித் பான்கல் (49 கிலோ), கவிந்தர் பிஸ்ட் (52 கிலோ) கவுரவ் பிதுரி (56 கிலோ), ஷிவதபா (60 கிலோ), மனோஜ்குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ), சுமித் சங்வான் (91 கிலோ), சதீஷ்குமார் (91 கிலோவுக்கு மேல்) ஆகிய 8 பேர் பங்கேற்கிறார்கள்.
உலக போட்டியில் இந்திய வீரர்கள் இதுவரை 3 முறை வெண்கலப்பதக்கம் வென்று இருக்கிறார்கள். 2009-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கம் வென்ற விஜேந்தர்சிங் தொழில்முறை வீரராக மாறி விட்டார். 2011-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றிய விகாஸ் கிருஷ்ணன், 2015-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கிய ஷிவதபா ஆகியோர் மீண்டும் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள். அவர்கள் இருவரும் இந்த முறையும் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதேபோல் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற 31 வயதான மனோஜ்குமார், காயத்தில் இருந்து மீண்டு வந்து இந்த ஆண்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய சுமித் சங்வான் ஆகியோரும் பதக்கம் வெல்ல நம்பிக்கை உடைய இந்திய வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.
போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் சான்டியாகோ நிவா (சுவிட்சர்லாந்து) அளித்த பேட்டியில், ‘நமது வீரர்கள் வலுவான நிலையில் உள்ளனர். இந்த ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். நமது வீரர்கள் 2 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கம் வென்று ஒட்டுமொத்தத்தில் 3-வது இடம் பிடித்தனர். இதனை அடுத்து பிரான்ஸ் மற்றும் செக்குடியரசு நாடுகளில் நமது வீரர்கள் பயிற்சி மற்றும் போட்டியில் பங்கேற்றனர். அதில் நமது வீரர்கள் அருமையாக செயல்பட்டனர். எனவே நமது வீரர்கள் இந்த போட்டியில் வலுவான திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். எத்தனை பதக்கம் வெல்வார்கள் என்பது குறித்து கணிக்க நான் விரும்பவில்லை. இந்த முறை முன்பை விட நமது வீரர்கள் அதிக பதக்கம் வெல்வார்கள்’ என்று தெரிவித்தார்.