வேதாரண்யம் அருகே உப்பள தொழிலாளி படுகொலை- உறவினர் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உப்பள தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உறவினரை போலீசார் கைது செய்தனர்.
கொலையுண்ட செந்தில்
கொலையுண்ட செந்தில்
Published on

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சோமு மகன் ரவி (வயது48). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தில்(40). உப்பள தொழிலாளி.

இவர்கள் இருவரும் உறவினர்கள். ரவி- செந்தில் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் ரவி தனது குடும்பத்துடன் கோடியக்காடு பகுதிக்கு சென்று வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று செந்தில், அவரது தாய் செல்வி, உறவினர் சாந்தா ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் கோடியக் காட்டுக்கு ஆயுதங்கள் மற்றும் மிளகாய் பொடியுடன் சென்றனர்.

கோடியக்காட்டுக்கு சென்ற அவர்கள் வீட்டில் இருந்த ரவி, அவரது மனைவி நாகலட்சுமி, மகன் கோகுலசந்திரன் ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவி ஆயுதங்களால் தாக்கினர்.

இதனால் ஆத்திரமடைந்த ரவி, செந்தில் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டினார். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சபிஉல்லா சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த செந்திலின் தாய் செல்வி, உறவினர் சாந்தா, ரவி மனைவி நாகலட்சுமி, மகன் கோகுலசந்திரன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தில் உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

போலீசாரின் விசாரணையில் பெண் தொடர்பு விவகாரத்தில் செந்தில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com