திருவள்ளூர் அருகே ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை

திருவள்ளூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த தொழிலாளி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதன்
ராமநாதன்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 28). கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு பாக்கியலட்சுமி (23) என்ற மனைவியும், 1 வயதில் ரித்திக்‌ஷா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ராமநாதன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இது சம்பந்தமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ராமநாதன், குடிபோதையில் செவ்வாப்பேட்டை வேப்பம்பட்டு ரெயில் நிலையம் சென்றார்.

அப்போது மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், அங்கு வந்த ரெயில் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது தொடர்பாக தகவலறிந்த திருவள்ளூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ராமநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரது சாவு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com