

மும்பை:
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திவரும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் பொதுமக்கள், போலீசார் மீது அவ்வப்போது பயங்கர தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த குழுவினரை வேட்டையாட மாநில சிறப்பு தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நக்சலைட்டுகள் அவரவர் செய்த குற்றங்களின் அடிப்படையில் தேடப்படும் நக்சலைட்டுகளின் தலைக்கு அரசு சார்பில் லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்படுவதுண்டு.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அம்மாநில சிறப்பு போலீஸ் படையினர் இன்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த என்கவுண்டரில் அப்பகுதியில் பதுங்கி இருந்த சுர்ஜனகா (48) என்ற பெண் நக்சலைட்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
என்கவுண்டரில் கொல்லப்பட்ட நக்சலைட்டு சுர்ஜனகா பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் அவரது தலைக்கு 16 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.