மயக்க ஊசி செலுத்தி என்னை சீரழித்தார் - கதிர்காமு மீது புகார் அளித்த பெண் பரபரப்பு தகவல்

அ.ம.மு.க. வேட்பாளர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண், கதிர்காமு தனக்கு மயக்க ஊசி செலுத்தி பின்னர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக கூறியுள்ளார்.
மயக்க ஊசி செலுத்தி என்னை சீரழித்தார் - கதிர்காமு மீது புகார் அளித்த பெண் பரபரப்பு தகவல்
Published on

தேனி:

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கதிர்காமு (வயது 61). இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு டி.டி.வி அணிக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த தேர்தலிலும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மீது பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.

கடந்த 14.10.2015-ம் தேதி தேனி அல்லி நகரத்தில் தனியார் ஆஸ்பத்திரி நடத்தி வந்த டாக்டர் கதிர்காமு தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.

எனது முழங்கால் வலிக்கு அவரிடம் சிகிச்சைக்கு சென்றேன். அப்போது எனக்கு மயக்க ஊசி போட்டதால் நான் மயங்கி விட்டேன். அப்போது என்னை பாலியல் பலத்காரம் செய்து விட்டார்.

இது குறித்து பின்னர் அவரிடம் நியாயம் கேட்டபோது எனது ஆபாச வீடியோவை எடுத்து வைத்துள்ளதாகவும் தான் அழைக்கும் போது ஆசைக்கு இணங்காவிட்டால் இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டினார்.

இதனை கூறியே என்னை பல முறை ஆசைக்கு இணங்க வைத்தார். அதன் பிறகு எம்.எல்.ஏ. ஆகி விட்டார். அதன் பிறகு நான் அவரை தொடர்பு கொண்டு எனது ஆபாச வீடியோவை என்னிடம் கொடுத்து விடுமாறு கெஞ்சி கேட்டேன். கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சென்ற போது அங்கு மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அவர்களும் என் மீது ஆசைப்படுவதாக கதிர்காமு கூறி மிரட்டினார்.

இவ்வாறு அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

தாமதமாக புகார் அளித்தது குறித்து அந்த பெண்ணிடம் கேட்ட போது கதிர்காமு எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இதனால் நான் அச்சத்தில் இருந்தேன். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெளியான பிறகு போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தைரியமாக புகார் கொடுத்துள்ளேன். மேலும் எனது புகார் மனுவிலும் எனது பெயரை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு எனது உயிருக்கு பாதுகாப்பு கோரியுள்ளேன் என்றார்.

இதனையடுத்து பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 417, 376, 505(1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் தேனி அனைத்து மகளிர் போலீசார் டாக்டர் கதிர்காமு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து கதிர்காமுவிடம் கேட்டபோது, என் மீது கொடுக்கப்பட்ட புகார் முற்றிலும் பொய்யானது. தோல்வி பயம் காரணமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்குமார், தம்பி ஓ.ராஜா ஆகியோர் தூண்டுதலின் பேரில் பொய் வழக்கு போட்டுள்ளனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com