மனைவி இறந்த சோகத்தில் டீக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

திருவெண்காட்டில் மனைவி இறந்த சோகத்தில் டீக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி பத்மாவுடன் குமார். (பழைய படம்)
மனைவி பத்மாவுடன் குமார். (பழைய படம்)
Published on

திருவெண்காடு:

நாகை மாவட்டம் திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது50). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி பத்மா (45). இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஒரு மகனுக்கு மட்டும் திருமணமாகி உள்ளது.

இந்த நிலையில் பத்மா உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் அவருக்கு உடல் நலம் சீராகவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பத்மா உடல் நலக்குறைவால் இறந்தார். மனைவி இறந்ததில் இருந்தே குமார் சோகமாக இருந்தார்.

மனைவியின் பிரிவை தாங்கி கொள்ள முடியாமல் தனது உறவினர்களிடம் மனைவி சென்ற இடத்துக்கே தானும் செல்வதாக குமார் உருக்கமாக பேசி வந்தார். உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறியும், மீண்டும், மீண்டும் மனைவியை பற்றிய சிந்தனையிலேயே அவர் மூழ்கி, மிகுந்த மன வேதனையுடன் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த அவர் திடீரென பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து மகன்கள் மற்றும் உறவினர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி இறந்த சோகத்தில் டீக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இந்த பரிதாப சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com