

மேற்கு வங்காளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மம்தா ஆட்சியை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதா தேர்தலில் குதித்துள்ளது. அம்மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை பா.ஜனதா இழுத்துள்ளது. பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய பலமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்துள்ள சுவெந்து அதிகாரி திகழ்கிறார். இவர் மம்தாவுடன் நந்திகிராமில் பலப்பரீட்சை நடத்துகிறார்.
பிரதமர் மோடி, பா.ஜனதா தேசியத் தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் மேற்கு மிட்னாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது ‘‘கங்குலி எப்போதெல்லாம் க்ரீஸை தாண்டி முன்னால் வருகிறாரோ, அப்போதெல்லாம் அவர் உறுதியாக சிக்சர் விளாசுவார். மக்களவை தேர்தல் ஆதரவு போன்று நீங்கள் ஆதரவு தந்தால், நாங்கள் நிச்சயமாக எல்லையை தாண்டி (க்ரீஸ்), உறுதியாக சட்டசபை தேர்தலில் சிக்சர் விளாசுவோம். இங்கு பா.ஜனதா ஆட்சி அமையும்’’ என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலி பா.ஜனதாவில் இணைய இருக்கிறார் என்ற செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தகுந்தது.