நலவாழ்வு முகாமில் பங்கேற்கும் யானைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

மேட்டுப்பாளையம் அருகே நலவாழ்வு முகாமில் பங்கேற்கும் யானைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.
நலவாழ்வு முகாமில் கலந்துகொண்ட யானைகள் (கோப்புப்படம்)
நலவாழ்வு முகாமில் கலந்துகொண்ட யானைகள் (கோப்புப்படம்)
Published on

மேட்டுப்பாளையம்:

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வளர்ப்பு யானைகளுக்கு நலவாழ்வு முகாம், கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நலவாழ்வு முகாம் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், 2020-21-ம் ஆண்டுக்கான யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் கோவில்கள், மடங்களை சேர்ந்த யானைகளின் விவரங்கள் மற்றும் முகாமில் ஏதேனும் யானைகள் பங்கேற்க முடியாவிட்டால், அதற்கான காரணங்கள் ஆகியவற்றை மின்னஞ்சல் மூலம் நாளைக்குள்(செவ்வாய்க்கிழமை) அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதனால் முகாமில் பங்கேற்கும் யானைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் நடைபெறுவது உறுதியாகி உள்ளது. மேலும் அங்கு முகாமுக்கான முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு காலை மற்றும் மாலை ஆகிய 2 வேளைகள் நடைபயிற்சி அளிக்கப்படும். மேலும் பவானி ஆற்று நீரில் பாகன்கள் மூலம் ஆனந்த குளியலுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. பின்னர் யானைகளுக்கு சமச்சீர் உணவு மற்றும் பசுந்தீவனங்கள் வழங்கப்படுகிறது. இது தவிர மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு யானைகளுக்கு முழு நேர ஓய்வு கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com