

கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோ ஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர். கடந்த எட்டாண்டுகளாக இவர்களின் கொலைவெறிக்கு சுமார் 20 ஆயிரம் உயிர்கள் பலியாகியுள்ளன.
இதற்கிடையில், கடந்த 14-4-2014 அன்று நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்ற போக்கோ ஹாரம் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சிறை வைத்தனர்.
பிணைக்கைதிகளாக மாணவிகள்
கடத்தப்பட்ட மாணவிகளில் சிலர் தப்பி ஓடி வந்துவிட்ட நிலையில், போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் பிடியில் 219 மாணவிகள் உள்ளதாக கூறப்படுகிறது. மாணவிகளின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாமல் நைஜீரிய அரசு திணறியது. அதே வேளையில், கடத்தப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியும் மாதங்களாகியும் மாணவிகளை மீட்க முடியாத நைஜீரிய அரசின் கையாலாகாதத்தனத்துக்கு உலகெங்கிலும் உள்ள பெண்ணுரிமை இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், போக்கோஹரம் தீவிரவாதிகளுடன் போர் நிறுத்தம் செய்வது தொடர்பாகவும், கடத்தப்பட்ட 219 மாணவிகளை பத்திரமாக உயிருடன் மீட்பது தொடர்பாகவும் அந்நாள் நைஜீரிய அதிபர் குட்லக் ஜொனாத்தனின் முதன்மை செயலாளர் ஹசன் டுக்கூர் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்.
அங்கு ஆட்சி மாற்றத்துக்கு பிறகும் நீடித்துவந்த இந்த பேச்சுவார்த்தையின் பலனாக நைஜீரிய சிறைகளில் இருக்கும் போக்கோ ஹரம் தீவிரவாதிகளை அரசு விடுவித்தால் அதற்கு மாற்றாக சிறைபிடிக்கப்பட்டுள்ள மாணவிகளில் சிலரை விடுவிப்பதாக போக்கோ ஹரம் குழுவினர் நிபந்தனை விதித்தனர்.
அந்த நிபந்தனையின்படி, ஆறு மாதங்களுக்கு முன்னர் முதல்கட்டமாக 21 மாணவிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் குழந்தைக்கு தாயாக மாறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மேலும் 82 மாணவிகளை போக்கோ ஹரம் தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளதாக நைஹீரிய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுதலைக்காக பெருமுயற்சியில் ஈடுபட்ட ஸ்விட்சர்லாந்து அரசு மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விடுதலையான 82 மாணவிகளையும் அபுஜா நகருக்கு அழைத்து சென்று நைஜிரிய அதிபர் முஹம்மது புஹாரியுடன் சந்திக்க வைக்கும் ஏற்பாடுகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த மாணவிகளை அதிபர் முஹம்மது புஹாரி நேற்று சந்தித்தார்.
நீங்கள் விடுதலையான இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்பதை என்னால் வெறும் வார்த்தைகளால் குறிப்பிட இயலாது என்று தெரிவித்த அதிபர் புஹாரி, நைஜீரிய மக்களின் சார்பில் உங்களை சுதந்திரமான உலகத்துக்கு வரவேற்கிறேன் என குறிப்பிட்டார்.
படிப்பை பாதியில் தொலைத்துவிட்டு எதிர்காலத்தை கவலையுடன் எதிர்நோக்கி நிற்கும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசு தொடர்ந்து செய்யும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.