

சசிகலா கணவர் நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் செயல் இழந்ததால் சென்னை ஆஸ்பத்திரியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.
விபத்தில் மூளைச்சாவு அடைந்த அறந்தாங்கி கூத்தவாடி வயல் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபரின் கல்லீரலும், சிறுநீரகமும் நடராஜனுக்கு பொருத்தப்பட்டது.
கார்த்திக் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதியதில் மூளைச்சாவு எற்பட்டு தஞ்சை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உறுப்புதான முறையில் அவரது உடல் உறுப்புகள் நடராஜனுக்கு பொருத்தப்பட்டது. இதற்காக கார்த்திக் உடல் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.
கார்த்திக்கின் இதயம் மற்றொரு 43 வயது ஆண் நோயாளிக்கும், நுரையீரல் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 62 வயது ஆண் நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.
இந்த 3 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் ஒரே நேரத்தில் நடந்தது. வாலிபர் கார்த்திக்கின் உடல் உறுப்புகள் மூலம் 3 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப் பின் உயிரிழந்த கார்த்திக்கின் உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான அறந்தாங்கி கூத்தாடிவயலுக்கு நேற்று இரவு 7 மணிக்கு கொண்டு வரப்பட்டது.
பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள் என பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் இரவு 9 மணிக்கு கூத்தாடிவயலில் உள்ள மயானத்தில் கார்த்திக் உடல் தகனம் செய்யப்பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்த கார்த்திக்கின் தாயார் பார்வதி கூறியதாவது:-
எனது மகனின் உடல் உறுப்புகள் 3 பேருக்கு தானம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் 3 பேர் உயிர் பெற்றுள்ளனர். எங்கள் சம்மதத்தின் பேரிலேயே உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது. இதற்காக நாங்கள் யாரிடமும் பணம் வாங்கவில்லை.
விபத்தில் காயம் அடைந்த மகனை மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றோம். ஆனால் அங்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இது முறைப்படி அறிவிக்கப்பட்ட பின்புதான் நாங்கள் அவனது உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன்வந்தோம்.
இவ்வாறு பார்வதி கண்ணீர் மல்க தெரிவித்தார்.