6 மாதமாக குடிநீர் சப்ளை ரத்து: காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

6 மாதமாக குடிநீர் வழங்கப்படாததால் பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
6 மாதமாக குடிநீர் சப்ளை ரத்து: காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
Published on

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ளது பெருமாள்பட்டி கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சேடப்பட்டி, ஆண்டிப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 6 மாதமாக குடிநீர் சப்ளை செய்யவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் யூனியன் அலுவலக அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். கலெக்டரிடம் தண்ணீர் வழங்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். ஆழ்குழாயில் உள்ள மோட்டாரும் தற்போது பழுதாகி விட்டது. மோட்டாரை பழுது பார்த்து தாருங்கள் என்று அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

அதற்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆத்திரமடைந்து திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் இன்று காலை 8 மணி அளவில் மறியலில் ஈடுபட்டனர். 9.30 மணி வரை போராட்டம் நடந்தது.

தகவல் அறிந்ததும் திருமங்கலம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com