

பெரம்பூர்:
வியாசர்பாடி, சர்மாநகர், எருக்கஞ்சேரி சாலையில் உள்ள கூட்டுறவு தொழிற்பேட்டையில் பாத்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
இன்று அதிகாலை தொழிற்சாலையின் 2-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அறை முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமானது.
இது குறித்து வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு அதிகாரி குணசேகரன் தலைமையில் 4 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அங்கு விற்பனைக்கு தயாராக இருந்த பாத்திரங்கள் மற்றும் அட்டைபெட்டிகள், பொருட்கள் கருகின. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் மற்ற தளங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும்.
இரவு நேரத்தில் ஊழியர்கள் பணியில் இல்லாதபோது தீப்பிடித்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரணை நடத்தி வருகிறார்.