சதுர்த்தி விழாவையொட்டி மதுரையில் 5 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடு

சதுர்த்தி விழாவையொட்டி மதுரையில் 5 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை
விநாயகர் சிலை
Published on

மதுரை:

மதுரை மாவட்டம் மற்றும் மதுரை நகர் பகுதிகளில் வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்த பின்னர் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த ஊர்வலத்தின் போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் எடுக்க வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மதுரையில் கலெக்டர் ராஜசேகர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

விநாயகர் சிலைகளை கரைக்க மதுரை நகரில் 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வைகை வடகரை கீழ்த்தோப்பு பகுதி, ஒத்தக்கடை குளம், வைகை தைக்கால் பாலம் (திருமலைராயர் படித்துறை), திருப்பரங்குன்றம் செவந்திகுளம் கண்மாய், அவனி யாபுரம் அயன்பாப் பாகுடி கண்மாய் ஆகிய 5 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று மேலூர் வட்டத்தில் மண்கட்டி தெப்பக்குளம், கொட்டாம்பட்டி திரவுபதி அம்மன் கோவில் தெப்பம், வாடிப்பட்டி வட்டத்தில் குமாரம் கண்மாய், மேலக்கால் வைகை, தாமோதரன்பட்டி தென்கரை, அய்யனார் கோவில் ஊரணி, பெரியாறு கால்வாய், திருமங்கலம் வட்டத்தில் குண்டாறு, மறவன்குளம் கண்மாய், குராயூர் கண்மாய், ஆவல்சூரன்பட்டி கிணறு, சிவரக்கோட்டை கமண்டல நதி, பேரையூர் வட்டத்தில் மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், வண்டாரி ஊரணி, எழுமலை பெரிய கண்மாய், டி.கல்லுப்பட்டி தேவன்குறிச்சி கண்மாய் மற்றும் உசிலம்பட்டி வட்டத்தில் நீர் அதிகம் உள்ள கிணறுகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும்.

சிலைகள் வைக்கப்படும் இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சிலைகள் செய்யப்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்து வாரியத்திடம் அறிக்கை அனுப்ப வேண்டும்.

சிலைகள் நிறுவப்படும் இடங்கள் அருகே மசூதி, தேவாலயங்கள் இருந்தால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஊர்வலத்தின்போது பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்த அனுமதி இல்லை. ஒலிபெருக்கிகளை குறைந்த சத்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

சிலைகள் களிமண், காகிதக்கூழ் ஆகியவற்றால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ரசாயன கலவையற்ற வர்ணம் பூசப்பட்ட சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.

மேற்கண்டவை உள் ளிட்ட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com