

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மணல் கடத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதி தாசில்தார்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விழுப்புரம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள புதுகருவாச்சி பகுதியில் உள்ள ஏரியில் மணல் கொள்ளை நடைபெறுவதாக விக்கிரவாண்டி தாசில்தார் சுந்தர் ராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சுந்தர ராஜன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மர்ம மனிதர்கள் 3 பேர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் மணல் ஏற்றி கொண்டிருந்தனர்.
உடனே அந்த மர்ம மனிதர்கள் 3 பேரையும் பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அதில் அவர்கள் புதுகருவாச்சி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (50), பழைய கருவாச்சி பகுதியை சேர்ந்த சங்கர் (36), கணேசன் (47) என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் தேவியாநந்தல் பகுதிக்கு மணல் கடத்தியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து ராஜேந்திரன், சங்கர், கணேசன் ஆகிய 3 பேரையும் பிடித்து விக்கிரவாண்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.