

கமுதி:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வார்டு எல்லை மறு வரையறை பணிகள் நடைபெற்று உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி கமுதி தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கான உத்தேச பட்டியல் பேரூராட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டது.
இதில் வார்டு 1 சிங்கம் புளியாபட்டி, வார்டு 2 வெள்ளையாபுரம் ஆகியவைகளை மறுவரையறையின்படி ஒரே வார்டாக இணைத்து வார்டு 15 என உத்தேச பட்டியலில் வெளியிடப்பட்டது.
இதற்கு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த 2 தரப்பினர்களும் சில தினங்களுக்கு முன்பு பேரூராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டு பேரூராட்சி அதிகாரியிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் ஆட்சேபனை தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதி அளித்தார். இந்த நிலையில் கமுதி பேரூராட்சி 2-வது வார்டு வெள்ளையாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராமத்தலைவர் தர்மலிங்கம் தலைமையில் பெண்கள் உள்பட 200 பேர் வெள்ளையாபுரம் முதல் நாடு விலக்கு ரோட்டில் ஆதிதிராவிடர் நல விடுதி முன்பு திடீர் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கமுதி போலீஸ் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் சக்கரபாணி, தாசில்தார் முருகேசன், துணை தாசில்தார் வரதராஜன், வருவாய் ஆய்வாளர் முருகானந்தம், பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆட்சேபனைகளை வருகிற 2-ந்தேதி வரை நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ தெரிவிக்க கால அவகாசம் இருப்ப தால் 3-ந்தேதி மறு வரையறை ஆணைய அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில் ஒரு மணி நேரமாக நடந்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
வார்டு மறு வரையறை தொடர்பான கருத்துக்களை கேட்க கமுதி தாலுகா அலுவலகத்தில் வருகிற 3-ந்தேதி சமாதான கூட்டம் நடைபெறும் எனவும் இதில் பேரூராட்சிகளின் மண்டல இணை இயக்குநர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்வதால் இந்த பிரச்சினைக்கு இறுதி முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. #tamilnews