ஓ.பி.எஸ். தோட்டம் ராட்சத கிணறுக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராமத்தினர் போராட்டம்

பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிணற்றுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கிராமத்தினர் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஓ.பி.எஸ். தோட்டம் ராட்சத கிணறுக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராமத்தினர் போராட்டம்
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கோம்பைக்காடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் விவசாய கிணறு அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றின் அருகே லட்சுமிபுரம் ஊராட்சிக்கு சொந்தமான கிணறில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்தில் ஏற்கனவே கிணறு தோண்டப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு ராட்சத கிணறு தோண்டப்பட்டுள்ளது. இதனால் ஊராட்சியின் குடிநீர் ஆதாரம் வற்றி விட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்களும் நடத்தினர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏராளமான பொதுமக்கள் கிணறு அமைந்துள்ள இடத்தை முற்றுகையிட்டு அதனை கிராமத்திடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போலீசார் தடுத்தும் கேட்காததால் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணவேணி, ஏ.டி.எஸ்.பி. பத்மாவதி உள்ளிட்ட வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கிராம மக்கள் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால், கிராம கமிட்டி தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதிகாரிகள் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கிராம மக்கள் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அதிகாரிகளை கண்டித்தும், ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்தில் உள்ள கிணறை மூட வலியுறுத்தியும், போராட்டத்தின் போது போலீசார் பொதுமக்களை கைது செய்ததை கண்டித்தும் லட்சுமிபுரம் கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ராட்சத கிணறு ஊராட்சி நிர்வாகத்துக்கு வரும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கிராம கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தெரிவிக்கையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமி பெயரில் உள்ள 18 செண்ட் இடத்தில் ராட்சத கிணறு அமைத்துள்ளதால் லட்சுமி புரம் ஊராட்சியில் ஒட்டு மொத்தமாக குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கிணற்றில் இருந்து கைலாசப்பட்டிக்கு நீர் எடுத்துச் செல்கின்றனர். மக்களின் உணர்வுகளை மதித்து ஓ.பன்னீர்செல்வம் கிணறை மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அவரது வழக்கறிஞர் சந்திரசேகரன் தெரிவிக்கையில், லட்சுமிபுரம் பகுதியில் 75 அடி ஆழத்தில் ஒரு கிணறு மட்டுமே உள்ளது. அதில் இருந்து தினமும் 2 மணி நேரம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் அதில் உள்ள தண்ணீர் முழுவதையும் மக்களுக்கு வழங்க தயாராக உள்ளோம். மக்களின் பங்களிப்போடு அரசின் திட்டங்களுக்கு எங்கள் சார்பில் கூடுதல் நிதி கொடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்துள்ளோம். இப்பிரச்சினையை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் தூண்டி விட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com