கிணற்றை ஒப்படைக்காததால் ஆத்திரம்: ஓ.பி.எஸ்.சை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரதம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான ராட்சத கிணற்றை ஒப்படைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
உண்ணாவிரதம் இருந்த கிராம மக்களை படத்தில் காணலாம்
உண்ணாவிரதம் இருந்த கிராம மக்களை படத்தில் காணலாம்
Published on

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் மேற்குதொடர்ச்சி மலையையொட்டி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு 200 அடி ஆழத்தில் ராட்சத கிணறு அமைக்கப்பட்டது.

இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் எதிராக குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. நிலம் மற்றும் கிணறை பொதுமக்களிடம் ஒப்படைப்பதாக ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.

ஆனால் அதற்குமுன்பே வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின்பு சமரசம் பேசி நிலம் மற்றும் கிணறை ஒப்படைக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அதை தாமதப்படுத்திக்கொண்டே வந்ததால் கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதனால் இன்று 6-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாக கிராம மக்கள் தெரிவித்திருந்தனர். இதற்காக தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டரிம் அனுமதி கோரி மனு அளித்தனர். ஆனால் போலீசார் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.

எனவே தடையை மீறி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com