சதாம் உசேனின் வலதுகரமாக திகழ்ந்தவர் இன்னும் உயிரோடு உள்ளார்: வீடியோ ஆதாரம் கிடைத்தது

ஈராக் நாட்டு விமானப்படை நடத்திய தாக்குதலில் இவர் கொல்லப்பட்டதாக கருதப்படும் எஸ்ஸட் அல் டவ்ரி உயிருடன் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சதாம் உசேனின் வலதுகரமாக திகழ்ந்தவர் இன்னும் உயிரோடு உள்ளார்: வீடியோ ஆதாரம் கிடைத்தது
Published on

பாக்தாத்:

ஈராக் நாட்டின் முன்னாள் அதிபரான சதாம் உசேன் சுமார் 24 ஆண்டுகள் அந்நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்தார்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகள் இணைந்து கடந்த 2003-ம் ஆண்டு மேற்கொண்ட போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. 13-12-2003 அன்று திக்ரித் நகருக்கு வெளியே உள்ள பாதாள அறைக்குள் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர்.

பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருந்த சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் உசேனுக்கு எதிரான விசாரிணை நடைபெற்றது. இதில் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

சதாமின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் 30-12-2006 அன்று அவர் தூக்கிலிடப்பட்டார்.

ஈராக்கின் அதிபராக பதவி வகித்துவந்தபோது சதான் உசேனின் வலதுகரமாக திகழ்ந்தவர், எஸ்ஸட் அல் டவ்ரி. முன்னர் அமெரிக்காவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவரது தலைக்கு அமெரிக்க அரசு ஒரு கோடி டாலர் பரிசு அறிவித்திருந்தது.

எனினும், கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்காவால் எஸ்ஸட் அல் டவ்ரியை கைது செய்ய இயலவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு ஈராக்கில் அந்நாட்டு விமானப்படை நடத்திய தாக்குதலில் இவர் கொல்லப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால், எஸ்ஸட் அல் டவ்ரி உயிருடன் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சதாம் உசேன் காலத்து பச்சைநிற ராணுவ சீருடையுடன் அவர் தோன்றும் சமீபத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி வருவதால் அவர் இன்னும் உயிருடன் இருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏமன் நாட்டில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போர் தொடர்பாக அந்த வீடியோவில் கருத்து தெரிவித்துள்ள எஸ்ஸட் அல் டவ்ரி, இந்த போர் முடிவுக்கு வர வேண்டுமானால், ஏமனில் உள்ள ஈரானியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com