

பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே வெள்ளியூர் ஊராட்சியில் புதிய காலனி,பழைய காலனி, ஊர் என்றும் மூன்று பகுதிகளில் சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் கிராம மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று விவசாய நிலங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து உபயோகப்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும் என்று ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால்,ஆத்திரமடைந்த கிராம மக்கள்,பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் செங்குன்றம் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இன்று காலை 6.30 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் செங்குன்றம் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது.
தகவலறிந்த வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், வருவாய் ஆய்வாளர் வைலட், கிராம நிர்வாக அதிகாரி கேசவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்காத பொதுமக்கள் உடனடியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.