வெங்கல் அருகே மோட்டார் சைக்கிளை திருடி வழிப்பறி- வாலிபர்கள் கைது

வெங்கல் அருகே மோட்டார் சைக்கிளை திருடி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெங்கல் அருகே மோட்டார் சைக்கிளை திருடி வழிப்பறி- வாலிபர்கள் கைது
Published on

பெரியபாளையம்:

வெங்கல் அருகே உள்ள வெளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகலா. இவர் கடந்த 15-ந் தேதி அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல் சந்திரகலா அணிந்திருந்த 8 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர். அன்றைய தினமே திருவள்ளூர் மற்றும் ஈக்காடு பகுதியிலும் வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

அப்போது கடந்த 14-ந் தேதி திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் மணிகண்டன் என்பவரது திருடு போன மோட்டார் சைக்கிளை பயன் படுத்தி மூன்று இடங்களில் வழிப்பறி சம்பவம் நடைபெற்றதையும் போலீசார் கண்டு பிடித்தனர்.

இது தொடர்பாக சென்னை கிழக்கு முகப்பேரை சேர்ந்த சங்கர் பாய் (22), சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த சரவணன் (24) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 20 சவரன் நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com