

சென்னை:
வேளச்சேரி ஏரி 265 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரந்து விரிந்த ஏரி ஆகும். மக்கள் தொகை பெருக்கம் நகர்ப்புற வளர்ச்சி காரணமாக ஏரியின் 53 ஏக்கர் நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கும், 34 ஏக்கர் நிலம் குடிசை மாற்று வாரியத்துக்கும் வழங்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏரி 2 ஆக பிரிக்கப்பட்டு 100 அடி சாலையும் அமைக்கப்பட்டது.
வேளச்சேரி ஏரியில் போதிய கண்காணிப்பு இல்லாததால் திரவுபதி அம்மன் கோவில் தெரு, ஜகநாதபுரம், ராஜலட்சுமி நகர், வேளச்சேரி 100 அடிச்சாலை, அஷ்டலட்சுதி நகர், காமராஜர்புரம், அம்பேத்கார் நகர் ஆகிய பகுதிகளில் ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
265 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்ட வேளச்சேரி ஏரி தற்போது ஆக்கிரமிப்புகளால் 50 ஏக்கராக சுருங்கி விட்டது.
ஒரு காலத்தில் வேளச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதியாக இந்த ஏரி திகழ்ந்தது. தற்போது சுற்றுப்புற குடியிருப்புகளின் கழிவு நீர், குப்பைகளால் வேளச்சேரி ஏரி மாசடைந்து வருகிறது.
வேளச்சேரி ஏரியை சீரமைத்து படகு குழாம் நடைபயிற்சி பாதை, இருக்கைகள் அமைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை. ஏரி ஆக்கிரமிப்புகளால் மழை காலங்களில் தண்ணீர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுத்து ஏரியை தூர்வார வேண்டும் என அப்பகுதி சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேளச்சேரி ஏரியில் குப்பைகளை அகற்றி மரக்கன்றுகள் நட வேண்டும். வீடுகளின் கழிவு தண்ணீர் ஏரியில் கலக்காமல் தடுக்க வேண்டும். அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு வசதியாக குப்பைத் தொட்டிகள் அமைத்து வேளச்சேரி ஏரியை காக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.