

சென்னை:
தமிழகத்தில் 10,024 சத்துணவு கூடங்கள் உள்ளன. இந்த உணவு கூடங்களில் சமையல் செய்து பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும் செயல்படும் இந்த உணவு கூடங்களுக்கு சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேவையான காய்கறிகளை சந்தைகளில் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
கிராமப்புறங்களில் ஆர்வத்துடன் பள்ளிகளில் காய்கறி தோட்டங்கள் அமைத்து அதை ஆசிரியர்களும், மாணவர்களும் பராமரிக்கிறார்கள். விளையாட்டு மற்றும் ஓய்வு நேரங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் அந்த தோட்டத்தை பாதுகாத்து பராமரிக்கிறார்கள்.
அதில் கிடைக்கும் இயற்கையான காய்கறிகள் மதிய உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஒரு சில பள்ளிகள் மட்டும் ஆர்வத்துடன் தாமாகவே முன் வந்து இந்த தோட்டக்கலையை அறிமுகப்படுத்தின.
தற்போது அனைத்து பள்ளிகளிலும் காய்கறி தோட்டம் அமைக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
தோட்டம் அமைப்பதற்கு பள்ளி வளாகத்தில் ஒரு சிறிய இடத்தை ஒதுக்க வேண்டும். இட வசதி இல்லாத பள்ளிகளில் மாடி தோட்டம் அமைக்கலாம். இந்த திட்டத்துக்கு விவசாயத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உதவிகள் செய்யலாம்.
மேலும் வேளாண்மைத் துறையினர், தோட்டக்கலைத் துறையினர் தோட்டங்கள் அமைக்க உதவி செய்வார்கள்.
இந்த தோட்டங்களில் விளையும் காய்கறிகளை தினமும் காலையில் நடைபெறும் கொடி வணக்க நிகழ்ச்சியின்போது மாணவர்களே பறித்து சமையலுக்கு வழங்க வேண்டும்.
இந்த தோட்டங்களை அமைப்பதன் மூலம் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க இயற்கையான காய்கறிகள் கிடைக்கும்.
அதோடு இயற்கையை பாதுகாப்பது, தோட்ட பயிர்கள் வளர்ப்பது ஆகியவற்றில் மாணவர்களுக்கு ஆர்வத்தையும் உருவாக்கும்.
இந்த தோட்டம் அமைப்பதற்கு 8-ம் வகுப்புவரை ஒரு குழுவாகவும், 12-ம் வகுப்புவரை ஒரு குழுவாகவும் பிரித்து மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.