சங்கரன்கோவில் தொகுதியை நெல்லையுடன் இணைக்க வேண்டும் - வைகோ

தென்காசி மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட சங்கரன்கோவில் தொகுதியை நெல்லையுடன் இணைக்க வேண்டும் என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
வைகோ
வைகோ
Published on

ம.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தைப் பிரித்து தென்காசியைத் தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்கப்படும் என்று 18.7.2019 அன்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்கின்றேன்.

புதிய தென்காசி மாவட்டம் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், ஆலங்குளம், வருவாய் வட்டப் பகுதிகளின் வளர்ச்சிக்கு, தென்காசி மாவட்டம் பயனுள்ளதாக அமைகின்றது.

அதே வேளையில், சங்கரன்கோவில் சட்ட மன்றத்தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் பகுதிகளில் இருந்து தென்காசிக்கு நேரடியான போக்குவரத்துத் தொடர்புகள் இல்லை. இவ்விடங்கள், தென்காசியில் இருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. திருநெல்வேலிதான் அருகில் இருக்கின்றது.

கல்வி, மருத்துவ தேவைகளுக்காக இப்பகுதி மக்கள் அன்றாடம் திருநெல்வேலிக்கு சென்று வருகின்றார்கள். சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்குப் போக்குவரத்துத் தொடர்புகள் எளிதாக இருக்கின்றன. ஆனால், இரவு 9 மணிக்கு மேல் தென்காசியில் இருந்து சங்கரன் கோவிலுக்குக் கூடப் பேருந்துகள் கிடையாது. அப்படியானால் திருவேங்கடம், இளையரசனேந்தல், குருவிகுளம், தேவர்குளம் பகுதி மக்கள் எப்படிப்பயணிக்க முடியும்?

எனவே, சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு மக்கள், திருநெல்வேலி மாவட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்க விரும்புகின்றார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com