உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் பலி- முதல்வர் இரங்கல்

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்
விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்
Published on

உத்தரகாசி:

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாசி மாவட்டம் மோரி பகுதியில் இருந்து இன்று காலை மோல்டி பகுதிக்கு ஹெலிகாப்டரில் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த ஹெலிகாப்டர் மோல்டியை நெருங்கியபோது விழுந்து நொறுங்கியது. இதில், பைலட் லால், துணை பைலட் ஷைலேஷ் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த ராஜ்பால் என ஹெலிகாப்டரில் பயணித்த 3 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில முதல்வர் திரிவேந்திர சிங்  ராவத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், 3 பேரின் குடும்பங்களுக்கும் தலா 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com