

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஜெயிலுக்குள் கைதிகள் மது அருந்தி உற்சாகமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த வீடியோ காட்சிகளை உள்ளூர் டி.வி. சேனல் திரும்ப திரும்ப ஒளிபரப்பியது. அதில் கைதி ஒருவர் செல்போனில் யாரிடமோ பேசி மதுபானம் கொண்டு வருமாறு கூறுகிறார்.
இதையடுத்து ஜெயிலுக்குள் திருட்டுத்தனமாக கொண்டு வரப்படும் மதுவை கைதிகள் அருந்தும் காட்சி மற்றொரு கைதி ஆயுதத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டும் காட்சியும் அந்த வீடியோவில் இருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து சிறைத்துறை முதன்மை செயலாளர் அரவிந்த்குமார் கூறியதாவது:-
வீடியோ வெளியானவுடன் ஜெயில் வளாகத்தில் உடனடியாக சோதனை செய்யப்பட்டது. அங்கு 4 செல்போன்கள், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக மூத்த ஜெயில் சூப்பிரண்டு உள்பட 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றார்.
கடந்த ஜூலை மாதம் உத்தரபிரதேசத்தில் உள்ள பாக்பத் ஜெயிலில் மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி சக கைதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தின்போது ஜெயிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாமல் இருந்தது தெரியவந்தது.