உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு வழிபாடு மூலம் விவசாயம் செழிக்கும் என்பதால் ஆண்டுதோறும் 48 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அமண லிங்கேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டதை படத்தில் காணலாம்.
உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டதை படத்தில் காணலாம்.
Published on

உடுமலை:

ஆடிப்பெருக்கையொட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடுகள் நடை பெறும். இதில்  திருப்பூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். 

48 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் சென்று   வழிபாடு நடத்தி விட்டு ஊர் திரும்புவார்கள். மாடுகளுக்கு பூஜை செய்வதுடன், முதியோர்களுக்கு  தர்ப்பணமும் கொடுப்பார்கள்.

ஆடிப்பெருக்கு வழிபாடு மூலம் விவசாயம் செழிக்கும் என்பதால் ஆண்டுதோறும் 48 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள்  அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக  வழிபாடு நடத்த முடியாத நிலை  ஏற்பட்டது.  இந்தாண்டும் கொரோனா காரணமாக வழிபாடு நடத்த தடைவிதிக்கப்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

மேலும் ஆடிப்பெருக்கு அன்று அமராவதி அணை பூங்காவில் தமிழக அரசு சார்பில்  பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தாண்டு அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

அமராவதி அணைப் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப் பட்டதால் பொதுமக்கள் இல்லாமல்  பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது. பக்தர்கள் சிலர் வழிபடுவதற்காக அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள்  கோவில் முன்பு நின்று வழிபாடு நடத்தி  விட்டு சென்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று களைகட்டி காணப்படும் அமராவதி அணை பகுதியானது இன்று களையிழந்து காணப்பட்டது. இதன் மூலம் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

மேலும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 22 கோவில்களில் ஆடி கிருத்திகை, ஆடிஅமாவாசை, ஆடிப் பெருக்கு வழிபாட்டில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் கோவில் முன்பு நின்று வழிபாடு நடத்தினர்.

பெரும்பாலான பொது மக்கள் கோவில்களுக்கு செல்லாமல் வீடுகளிலேயே  ஆடிப்பெருக்கு வழிபாட்டை நடத்தினர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்,  ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் கோவில்களுக்கு சென்று வழிபடுவது மகிழ்ச்சியை தரும்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது  கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளிலேயே வழிபாடு நடத்தினோம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com