

குலசேகரம்:
குலசேகரத்தை அடுத்த பொன்மனை மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விது குமார், (வயது 35).
இவர் குலசேகரம் சந்தை பகுதியில் ஓர்க்ஷாப் கடை வைத்துள்ளார். நேற்று இவர் தனது நண்பர் ஒருவரின் காரை வாங்கிக் கொண்டு வெளியே புறப்பட்டார். காரை விதுகுமார் ஓட்டிச் சென்றார். அவருடன் குலசேகரம் அஞ்சுகண்டரையைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ் என்ற ஜெயசிங் (32), அருமனையைச் சேர்ந்த சாம் (21) தேவிக்குளம் மூணாற்றைச் சேர்ந்த செல்வன் ஆகியோர் உடன் சென்றனர்.
திற்பரப்பு அருகே மஞ்சகோணம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றை முந்திச் செல்ல விது குமார் முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென எதிரே லாரி ஒன்று வந்தது.
இதைப்பார்த்த விதுகுமார் காரை திருப்ப முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரில் இருந்த விதுகுமார், வின்சென்ட் ராஜ், சாம், செல்வன் ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொது மக்களும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த வின்சென்ட் ராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விதுகுமாரையும், காயமடைந்த சாம், செல்வன் ஆகியோரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி விதுகுமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார். சாம், செல்வனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான வின்சென்ட் ராஜ், விதுகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அவர்களது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். விபத்து குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான வின்சென்ட் ராஜுக்கு இன்னும் திருமணமாகவில்லை. விதுகுமாருக்கு பூர்ணிமா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். தற்போது விதுகுமாரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.