

மும்பை:
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள காமாத்ரிபுத்ரா போன்ற சிவப்பு விளக்கு பகுதிகளில் உரிய அனுமதி பெற்று பாலியல் தொழிலில் பல பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, போலீசாருக்கு தெரியாமல் ரகசியமாக சில இடங்களில் இந்த தொழில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டி.டி. மார்க் காவல் நிலைய போலீசார் நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் தெற்கு மும்பையின் கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்குள் அதிரடியாக சோதனையிட நுழைந்தனர். மேலே பல பாலியல் தொழிலாளிகள் தங்களது வாடிக்கையாளர்களுடன் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் பணியாளர்கள், கீழே போலீசார் வந்திருப்பதை மேல் மாடியில் இருந்தவர்களிடம் தெரியப்படுத்தினர்.
இதில் பதற்றமடைந்த இரு பெண்கள் மூன்றாவது மாடி அறையில் இருந்து ஒரு கயிற்றின் உதவியுடன் கீழே குதிக்க முயன்றனர். ஆனால், இருட்டில் பிடிநழுவி அவர்கள் கீழே விழுந்து காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தனர்.
இதை கண்ட போலீசார் அவர்களை பைக்குல்லா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 50 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க அந்த இரு பெண்களும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். #tamilnews #policeraid