

மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நாடார் காலனியில் செல்வ விநாயகர், செல்வமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் திருவிழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது. அன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனை சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 31 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. அவர்கள் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 12 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். 2 குழந்தைகள் உள்பட 19 பேர் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பிரசாதம் சாப்பிட்ட மேலும் 11 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. அவர்களும் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தவிர வேறு சிலருக்கும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளனர்.
இவர்களில் லோகநாயகி (62), சாவித்திரி (60) ஆகிய 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். அவர்களை யாரும் கவனிக்காததால் மிகவும் பலவீனமடைந்து வீட்டில் இறந்தது தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 30 பேர் தற்போது மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவில் பிரசாதம் தயாரிக்க அசல் நெய்யை பயன்படுத்தாமல் தீபம் ஏற்ற பயன்படுத்தும் நெய்யை பயன்படுத்தியதால் அது விஷமாக மாறி பலருக்கு வாந்தி, வயிற்று போக்கை ஏற்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
பலியான லோகநாயகி, சாவித்திரி ஆகியோரது உடல்கள் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறப்புக்கான காரணத்தை கண்டறிவதற்காக லோகநாயகி, சாவித்திரி ஆகியோரின் உடல் உள் உறுப்புகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். ஆய்வு அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே மேட்டுப்பாளையம் நாடார் காலனி பகுதியில் வருவாய் துறையினர் வீடு, வீடாக சென்று பிரசாதம் சாப்பிட்டவர்கள் யாராவது சிகிச்சை பெறாமல் இருக்கிறார்களா? என கேட்டறிந்து வருகிறார்கள்.
மேலும் குடிநீர் சம்பந்தமாக எதுவும் பாதிப்பு ஏற்பட்டதா? என கண்டறிய மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுதா உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மேட்டுப்பாளையம் நாடார் காலனி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏதுவும் ஏற்பட்டு உள்ளதா? என ஆய்வு நடத்தினர்.
மேலும் குடிநீரில் குளோரைடு அளவு சரியாக உள்ளதா? என ஆய்வு நடத்த குடிநீரை பரிசோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர். இந்த பரிசோதனை முடிவு வரும் வரை குடிநீர் வினியோகத்தை நிறுத்தி உள்ளனர்.
மேலும் பொதுமக்களுக்கு மாத்திரைகள், திரவ கரைசல்கள் வழங்கப்பட்டது.
கோவையில் இருந்து இன்று மருத்துவ குழுவினர் மேட்டுப்பாளையம் செல்கிறார்கள். அவர்கள் அங்கு ஆய்வு நடத்துகிறார்கள். மேலும் யாராவது பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என ஆய்வு செய்ய உள்ளனர்.