மரக்காணத்தில் கடலில் மூழ்கி 2 பேர் மாயம்

மரக்காணத்தில் கடலில் மூழ்கி 2 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலில் மூழ்கி மாயம்
கடலில் மூழ்கி மாயம்
Published on

மரக்காணம்:

மரக்காணம் கரிப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. இவருடைய மகன் மோகன் (வயது 23). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அந்த கம்பெனியில் கட்டாய விடுமுறை விடப்பட்டதையொட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன் மோகன் ஊருக்கு வந்தார்.

நேற்று மாலை மோகன், தனது நண்பரான முருகவேல் (17) உள்பட 5 பேருடன் மரக்காணம் கடற்கரைக்கு சென்றார். அங்கு அவர்கள் கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கியதால் மோகனும், முருகவேலும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் அருகில் இருந்த மீனவர்களிடம் தெரிவித்தனர்.

உடனே மீனவர்கள் மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்புத்துறை, கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் படகு மூலமாக கடலில் மூழ்கிய மோகன், முருகவேலை நீண்ட நேரமாக தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமாகிவிட்டதால் தேடும்பணி நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com