வேதாரண்யத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் - 3 பேர் கைது

வேதாரண்யத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் அரசு பேருந்து மீது கல்வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வன்முறை கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்ட ஜீப்
வன்முறை கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்ட ஜீப்
Published on

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் இருந்து ஜீப்பில் ஒருவர் நேற்று மாலை வேதாரண்யத்துக்கு வந்தார். வேதாரண்யம் போலீஸ் நிலையம் எதிரே வந்தபோது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது24) என்பவர் மீது ஜீப் மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து காரணமாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. போலீஸ் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த அந்த ஜீப்புக்கு திடீரென தீ வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து, வன்முறையாக வெடித்தது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையையும் உடைத்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் மீதும் போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. வன்முறையின்போது வீசப்பட்ட ஏராளமான கற்கள், வாகனத்தின் நொறுங்கிய கண்ணாடிகள் சிதறிக் கிடந்ததால் வேதாரண்யம் போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.

வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தின் ஜன்னல் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் பஸ்களையும் கல்வீசி தாக்க தொடங்கியதால் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.

இதனிடையே வேதாரண்யம் பகுதிக்கு வந்த அகஸ்தியன்பள்ளி கூத்ததேவன்காடு பாபுராஜன் (30), ராஜாளிக் காட்டை சேர்ந்த சரத்குமார் (27) ஆகிய 2 பேர் மர்ம கும்பலால் கத்தியால் தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், அதனை உடைத்தவர்களை கைது செய்யக்கோரியும் நாகை-நாகூர் நெடுஞ்சாலையில் வெளிப்பாளையம், வண்டிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த நாகூர் போலீசார், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் வேதாரண்யம் முழுவதும் பதற்றம் நிலவியது. இதனால் நகர் முழுவதும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். அதிவிரைவு படை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

வன்முறை காரணமாக வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர், கோடியக்கரை உள்பட பல பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாயினர்.

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து மேட்டுப்பாளையம் கவுண்டம்பாளையத்தில் சிலர் கல் வீசியதில் 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

மேலும் விருத்தாசலத்தில் அரசு பேருந்து மீது கல்வீசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com