7 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தினகரனுடன் ஆலோசனை

பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 7 எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜியும், 6 எம்.எல்.ஏ.க்களும் தினகரனை சந்தித்தனர்.
7 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தினகரனுடன் ஆலோசனை
Published on

அ.தி.மு.க. அம்மா அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர் டி.டி.வி.தினகரன் கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கியே உள்ளார்.

கடந்த 3-ந்தேதி திகார் சிறையில் இருந்து வெளியில் வந்த அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறி இருந்தார். ஆனால் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு அவர் செல்லவில்லை. தனது வீட்டில் இருந்தபடியே கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தினமும் ஆலோசனை நடத்தினார். 35-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடி ஏற்படும் சூழலும் நிலவியது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த பின்னர் தினகரன் அமைதியானார். அடுத்த மாதம் 5-ந்தேதி வரை பொறுமையுடன் இருக்குமாறு சசிகலா கூறி இருக்கிறார்.

அதன்பின்னர் தீவிரமாக அரசியல் களத்தில் செயல்படுவேன் என்று தினகரன் அறிவித்தார். பின்னர் அவரது வேகம் படிப்படியாக குறைந்தது. ஆதரவாளர்களை சந்திப்பதையும் அவர் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 7 எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜியும், 6 எம்.எல்.ஏ.க்களும் தினகரனை சந்தித்தனர். அப்போது அவர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியான தளவாய் சுந்தரம், அ.தி.மு.க. அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோரும் தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஜனாதிபதி தேர்தலில் இன்று எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்ட நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவரை திடீரென சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com