

மதுரை:
மதுரை பாத்திமா நகரைச் சேர்ந்தவர் அல்போன்சா என்ற மல்லிகா (வயது24). திருநங்கையான இவர் நேற்று இரவு தனது மொபட்டில் கோரிப்பாளையத்தில் இருந்து மீனாட்சி கல்லூரி வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள லாட்ஜ் அருகே 2 மர்ம நபர்கள் அல்போன்சாவை வழிமறித்தனர். அவர்கள் அல்போன்சாவிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் தர மறுத்ததால் 2 பேரும் வலுக்கட்டாயமாக அல்போன்சாவை அருகில் உள்ள லாட்ஜுக்கு கடத்தி சென்றனர்.
அங்குள்ள அறையில் அடைத்து அவரை தாக்கிய 2 பேரும் பணம் கேட்டு மிரட்டினர். அல்போன்சா பணம் இல்லை என்று மறுத்து விட்டார். ஆத்திரம் அடைந்த 2 பேரும் கத்தியால் அல்போன்சாவின் உடலில் சரமாரியாக குத்தினர்.
ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அல்போன்சா அங்கேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்த 2 பேரும் அங்கிருந்து தப்பினர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அல்போன்சாவை லாட்ஜில் இருந்த சிலர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருநங்கை அல்போன்சாவை கத்தியால் குத்தியது எச்.எம்.எஸ். காலனியை சேர்ந்த ஸ்டாலின் (26), அவரது சகோதரர் திலீபன் என தெரியவந்தது. போலீசார் ஸ்டாலினை கைது செய்த னர். திலீபனை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அல்போன்சா இன்று பிற்பகல் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.