

விழுப்புரம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கீரமங்கலத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன். இவரது மகள் அபிராமி(வயது 36). திருநங்கையான இவர் விழுப்புரம் அய்யன் கோவில்பட்டியில் உள்ள மற்ற திருநங்கைகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அதிகாலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அபிராமி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் கல்லால் தாக்கப்பட்டு காயங்கள் இருந்தது. யாரோ மர்ம நபர்கள் அபிராமியை கொலை செய்துவிட்டு பிணத்தை சாலையோரம் வீசி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலின் பேரில் விழுப்புரம் தாலுக்கா போலீசார் விரைந்து சென்று அபிராமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதணைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரின் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அபிராமியின் சொந்த ஊரான விருத்தாசலம் அருகே உள்ள கீராமங்கலம் சென்று விசாரணை நடத்தினர், விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன அபிராமிக்கு அந்த பகுதி சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றி வரும் வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு ராணுவவீரரின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ராணுவீரரின் பேரில் உள்ள சொத்துக்கள் அபிராமிக்கு சென்று விடும் என்று கருதினார்கள். இதனால் ராணுவ வீரரின் உறவினர்கள் அபிராமியை கொலைசெய்ய திட்டம் தீட்டினர்.
கடந்த 16-ந்தேதி நள்ளிரவு அபிராமி தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தனர். பின்பு பிணத்தை சாலையோரம் வீசி சென்றனர். கொலையை ராணுவ வீரரின் உறவினர்கள் மற்றும் 3 திருநங்கைகள் உள்பட 6 பேர் சேர்ந்து செய்தது தெரியவந்தது
இன்று காலை கொலையாளிகள் 6 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.