

சென்னை:
சென்னையிலும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதியிலும் தென் மாவட்ட மக்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள். அதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் எப்போதும் நிரம்பியே செல்கின்றன.
தற்போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால் ரெயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் நெல்லை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விடுகின்றன.
எழும்பூரில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ், இரவு 8.10 மணிக்கும் பொதிகை எக்ஸ்பிரஸ் 9.05 மணிக்கும் புறப்பட்டு செல்கின்றன. இரண்டு ரெயில்களுக்கும் இடையே 55 நிமிடங்கள் இடைவெளி இருந்தாலும் முன்பதிவு செய்த பயணிகள் பலர் மாறி ரெயிலில் உட்கார்ந்து விடுகின்றனர். இணைப்பு ரெயில் பெயர் குழப்பத்தால் செங்கோட்டை செல்லும் பயணிகள் நெல்லை எக்ஸ்பிரசில் ஏறி சென்று விடுகின்றனர்.
நெல்லை எக்ஸ்பிரசில் உள்ள பெயர் பலகையே இந்த குழப்பத்திற்கு காரணமாகும். எழும்பூர்-திருநெல்வேலி- செங்கோட்டை என ரெயில் பெட்டிகளில் பெயர் பலகை இடம் பெற்று இருப்பதால் அதனை பார்த்து விட்டு செங்கோட்டைக்கு செல்லக் கூடியவர்கள் தவறுதலாக ஏறி பயணம் செய்கின்றனர். தாங்கள் செல்ல வேண்டிய ரெயில் 9.05 என்று கூட தெரியாமல் பலர் முன் கூட்டியே நெல்லை எக்ஸ்பிரசில் அமர்ந்து விடுகின்றனர். அந்த இடத்திற்கான பயணி தாம்பரத்தில் ஏறிய பிறகோ அல்லது டிக்கெட் பரிசோதகர் ஆய்வு செய்த பிறகோ தான் ரெயில் மாறி ஏறியதே அந்த பயணிக்கு தெரிய வரும்.
அதுவரையில் தாம் செங்கோட்டை (பொதிகை) ரெயிலில் பயணம் செய்வதாக கருதி செல்கின்றனர். முன்பதிவு செய்தவர்களின் பட்டியல் முன்பெல்லாம் ஒவ்வொரு பெட்டியிலும் இரு வாசல் பகுதியிலும் ஒட்டப்படும். ஆனால் இப்போது எந்த ரெயிலிலும் பெயர் பட்டியல் ஒட்டுவது இல்லை. பட்டியலை பார்த்து தங்கள் பெயர் இருக்கிறதா? என்று பயணிகள் உறுதி செய்து தெளிவாக பயணம் செய்த காலம் மாறிப் போய் விட்டது.
காகிதம் இல்லா டிஜிட்டல் நடவடிக்கைக்கு ரெயில்வே துறையும் மாறி விட்டதால் படிக்காதவர்கள் மட்டுமின்றி படித்தவர்களுமே சில நேரம் கவனக்குறைவாக இந்த தவறை செய்ய நேர்ந்து விடுகிறது.
நெல்லை எக்ஸ்பிரஸ் அங்கு சென்றவுடன் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரெயில் புறப்படுகிறது. அந்த இணைப்பை குறிப்பதற்காக நெல்லை எக்ஸ்பிரசில் செங்கோட்டை என பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து தான் மக்கள் தவறுதலாக பயணம் செய்கின்ற நிலை ஏற்படுகிறது. எழும்பூர்-திருநெல்வேலி என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் இந்த குழப்பம் ஏற்படாது.
இத்தகைய குழப்பத்தால் பயணிகள் பரிசோதகரிடம் தகராறில் ஈடுபடுவதும் தேவையற்ற சர்ச்சைகளும் தினமும் நெல்லை எக்ஸ்பிரசில் நடந்து வருகிறது.
இதுகுறித்து தென்காசி பயணி ஒருவர் கூறியதாவது:-
பொதிகை எக்ஸ்பிரசில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் நெல்லை எக்ஸ்பிரசில் மாறி ஏறுவதற்கு காரணமே அதில் ‘செங்கோட்டை’ என்று எழுதப்பட்டு இருப்பதுதான். படிக்காதவர்கள், வயதானவர்கள், பெண்கள் மிகவும் தடுமாறுகிறார்கள். 7-வது மற்றும் 9-வது பிளாட்பாரங்களில் இருந்து புறப்படும் இந்த ரெயில்களில் தினமும் இதுபோன்ற சம்பவம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பொங்கலுக்கு ஊருக்கு செல்லும்போது நான் தவறுதலாக நெல்லை எக்ஸ்பிரசில் ஏறிவிட்டேன். இது தெரியாமல் பயணம் செய்த நான் டிக்கெட் பரிசோதகர் வந்த பிறகு தான் ரெயில் மாறி ஏறியதே எனக்கு தெரிந்தது. பின்னர் தாம்பரத்தில் இறங்கி பின்னால் வந்த செங்கோட்டை ரெயிலில் பயணம் செய்தேன் என்றார். #tamilnews