

திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் ரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள பகுதி கடந்த காலத்தில் குளமாக இருந்தது. தற்போது அங்கு கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு அலுவலர் குடியிருப்பு உள்பட பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போதும் இந்த பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இங்குமீன், ஆமை, பாம்பு உள்ளிட்டவை காணப்படுகின்றன. இங்குள்ள அலுவலக வளாகங்களில் அவ்வப்போது பாம்புகள் வருவது வழக்கம்.
இதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆமை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றும் ஒரு ஆமை கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் அருகே சுற்றி வந்தது. இதை பொதுமக்களும் அரசு ஊழியர்களும் ஆவலுடன் வேடிக்கை பார்த்தனர். பின்னர் தகவல் அறிந்த வனத்துறையினர் வந்து அந்த ஆமையை மீட்டனர். இதுகுறித்து திருப்பூர் வனச்சரக அலுவலர் மகேஷிடம் கேட்டபோது அது ஆண் ஆமை என்றும், அதற்கு சுமார் நான்கு வயது இருக்கும் என்றும் அவர் கூறினார். பிடிபட்ட ஆமையை வனத்துறையினர் திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் பத்திரமாக விட்டனர்.