

திருவனந்தபுரம்:
லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் படேல், அங்குள்ள மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாகவும், அதிரடி மாற்றங்கள் என்ற பெயரில் தவறான முடிவுகளை அமல்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர் செய்துவரும் பல்வேறு சீர்திருத்தங்கள் லட்சத்தீவில் பூர்வகுடிகளாக வாழ்ந்துவரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு தரப்புகளில் இருந்தும் லட்சத்தீவு அதிகாரிக்கு எதிராக புகார் கிளம்பியது. மத்திய அரசு லட்சத்தீவு அதிகாரியைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் படேல் எடுத்த பல்வேறு சர்ச்சைக்குரிய முடிவுகளுக்கு எதிராக ஓய்வு பெற்ற 93 உயர் அதிகாரிகள் (குடிமைப்பணிகள்) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அரசியலமைப்பு நடத்தை குழு என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், அவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்றும். நடுநிலைமை மற்றும் இந்திய அரசியலமைப்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை நம்புவதாகவும் கூறி உள்ளனர்.
வளர்ச்சி என்ற பெயரில் அழகான லட்சத்தீவில் நடைபெற்று வரும், அமைதியை குலைக்கும் நடவடிக்கைகள் குறித்த ஆழ்ந்த கவலையை பதிவு செய்யவே கடிதத்தை எழுதியதாகவும் கூறி உள்ளனர்.
நிர்வாக அதிகாரியின் தொடர்ச்சியான சர்ச்சைக்குரிய முடிவுகளுக்கு கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்துள்ள அவர்கள், இந்த வரைவு விதிமுறைகள் ஒவ்வொன்றும் தீவுகள் மற்றும் தீவுவாசிகளின் நெறிமுறைகளுக்கும் நலன்களுக்கும் எதிரான பெரிய நடவடிக்கையின் ஒரு பகுதி என்பது தெளிவாகிறது என கூறி உள்ளனர்.
‘இந்த முடிவுகள் லட்சத்தீவு மக்களுடன் கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, நிர்வாக அதிகாரியின் சர்ச்சைக்குரிய முடிவுகளை வாபஸ் பெறவேண்டும். அத்துடன், முழுநேர, மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் நிர்வாகியை நியமிக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி உள்ளனர்.