போக்குவரத்து தொழிலாளர்கள் மே 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் மே 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் மே 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
Published on

சென்னை:-

தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டு தோறும் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும். 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த மார்ச் 7-ந்தேதி தொடங்கியது. குரோம்பேட்டையில் உள்ள பனிமனையில் பல்வேறு கட்டங்களாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. 

இந்த பேச்சுவார்த்தைகளில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செயலாளர் சந்திரகாந்த் காம்ப்ளே மற்றும் அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள், 51 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டனர். 

அண்ணா தொழிற்சங்கம், எல்.பி.எப்., பாட்டாளி, மறுமலர்ச்சி, ஐ.என்.டி.யு.சி., கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள், விடுதலை சிறுத்தை தொழிலாளர் சங்கம் போன்றவை பங்கேற்றன.

இந்நிலையில் இன்றும் போக்குவரத்து தொழிலாளர்கள், அரசு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் மே 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு போக்குவரத்து துறையை சேர்ந்த 90 சதவீதம் தொழிலாளர்கள் சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அனைத்து தொழிலாளர்கள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

50 சதவீத ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் செய்தல், போக்குவரத்து துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்குதல், அவைருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

கோரிக்கை நிறைவேற்றப்படாததால் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக திமுக தொழிற்சங்கமான தொமுச-வின் தலைவர் சண்முகம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com