10-ம் வகுப்பு முடித்ததும் ஐஐடி, நீட் தேர்வுக்காக ஆந்திராவில் குடியேறும் தமிழக மாணவர்கள்

ஐ.ஐ.டி. மற்றும் நீட் தேர்வு பயிற்சிக்காக 10-ம் வகுப்பு முடித்ததும் மேற்படிப்புக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா சென்று படிக்க தமிழக மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.#NeetExam #JEEAdvance
10-ம் வகுப்பு முடித்ததும் ஐஐடி, நீட் தேர்வுக்காக ஆந்திராவில் குடியேறும் தமிழக மாணவர்கள்
Published on

சென்னை:

ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிக்க வேண்டும், எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராக வேண்டும், என்ஜினீயர் ஆக வேண்டும் என்பது பல தமிழக மாணவர்களின் கனவாக உள்ளது.

இதற்கு போதிய பாடத் திட்டங்களும், பயிற்சியும் அவசியம் ஆகும். தமிழகத்தைப் பொறுத்த வரை பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு மொத்தம் 6 பாடங்கள் வைக்கப்படுகின்றன. முதல் மொழிப் பாடம், 2-ம் மொழிப்பாடம், கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல் என 6 பாடங்களை தமிழக மாணவர்கள் படித்தாக வேண்டும். பிளஸ்-2 வகுப்பில் எந்தப் பிரிவை எடுத்தாலும் 6 பாடங்கள்தான்.

ஆனால் ஆந்திரா-தெலுங்கானாவில் பிளஸ்-2 வகுப்புக்கு 5 பாடங்கள் மட்டுமே. ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்களை மட்டுமே அவர்கள் படிக்கின்றனர். மேலும் பெரும்பாலான பள்ளிகளில் ஐ.ஐ.டி. சேர்க்கைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பாடத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளன.

வகுப்பில் பெரும்பாலும் பள்ளிப் பாடங்கள் நடத்தப்படுவதில்லை. ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன.

எனவே ஐ.ஐ.டி. கனவில் இருக்கும் மாணவர்கள் ஆந்திரா- தெலுங்கானா சென்று படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆந்திரா- தெலுங்கானாவில் பொது அறிவை வளர்க்கும் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் பொது நுழைவுத் தேர்வு ஒன்றையே மையமாக வைத்து வகுப்புகள் நடத்தப்படுவதால் தமிழக மாணவர்கள் ஆந்திரா- தெலுங்கானா சென்று பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் கலாசாரம் சில ஆண்டுகளாக பெருகி வருகிறது.

பெரும்பாலான தமிழக மாணவர்கள் ஐதராபாத் மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அவர்கள் தங்கி படிப்பதற்கு வசதியாக பெற்றோரும் ஆந்திரா- தெலுங்கானா சென்று குடியேறுகிறார்கள்.

அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்ட என்ஜினீயரிங் தர வரிசைப் பட்டியலில் 8-வது இடம் பிடித்த என்.ஏ.நிஷா, 9-வது இடம் பிடித்த எஸ்.நிதிஷ்குமார், 10-வது இடம் பிடித்த மணிகண்டன் ஆகிய 3 பேரும் ஆந்திராவில் பிளஸ்-2 வரை படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர் நிதிஷ்குமார் ஐதராபாத் நாராயணா ஜுனியர் கல்லூரியில் 9-ம் வகுப்பில் இருந்து படித்து வருகிறார். 4 ஆண்டுகள் அங்கு படித்து முடித்த நிலையில் மும்பை ஐ.ஐ.டி.யில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

அவரது தாய் உஷா கூறுகையில், “நான் மகன் படிப்புக்காக ஐதராபாத்தில் தங்கி இருக்கிறேன். எனது கணவர் செல்வராஜ் இங்கு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். எனது மகனை ஐ.ஐ.டி.யில் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கான பயிற்சி இங்கு அளிப்பதால் சேர்த்தோம்” என்றார்.

ஆந்திராவில் படித்த மற்றொரு மாணவரான மணிகண்டன் திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தைச் சேர்ந்தவர். இவர் திருப்பதியில் நாராயணா குரூப் பள்ளியில் படித்தார்.

இதே போல் மாணவி நிஷா திருவள்ளூர் மாவட்டம் கொடி வளசல் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆந்திராவின் புத்தூரில் படித்தவர்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியலில் 2-வது இடம் பிடித்த மாணவர் ராஜ்செந்தூர் அபிஷேக் விஜயவாடாவில் படித்தவர்.

மாணவர்கள் கூறும் போது, ஆந்திராவில் நுழைவுத் தேர்வை மையமாக வைத்து பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இது ஐ.ஐ.டி. மருத்துவம், என்ஜினீயரிங் போன்றவற்றில் சேர வசதியாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

இதுபற்றி தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் கூறும்போது, “தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடங்களின் எண்ணிக்கையை 5 ஆக குறைக்க வேண்டும், இல்லையெனில் ஆந்திராவில் படித்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றனர். #NeetExam #JEEAdvance

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com