

புதுடெல்லி:
டெல்லியில் அரசியல் கட்சிகள், அமைப்புகளின் போராட்டக்களமாக அறியப்படும் பகுதி ஜந்தர் மந்தர் ஆகும். இங்குதான், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்த ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இது அங்கு போராட்டம் நடத்தி வரும் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழக விவசாயிகளையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனவே இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து பிரகாஷ் என்ற விவசாயி கூறுகையில், ‘நாங்கள் காந்திய வழியில் போராடி வருகிறோம். பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்த 28 நாட்கள் அவகாசம் இருக்கிறது. போலீசாருக்கே இன்னும் அந்த நோட்டீஸ் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் ஜந்தர் மந்தரிலேயே இருக்கிறோம். இந்த உத்தரவை எதிர்த்து விரைவில் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்’ என்றார்.
இதற்கிடையே போராட்டத்தின் 83-வது நாளான நேற்று, பிரதமர் மோடி வேடம் அணிந்த ஒருவர், பிற விவசாயிகளுக்கு சாக்கடை நீரை தருவது போல சித்தரித்து காண்பிக்கப்பட்டது. காவிரி நீரை தமிழகத்துக்கு தராமல் ஏமாற்றி விட்டதை உணர்த்த இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக விவசாயிகள் கூறினர்.