

பிரேசில் நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மா உட்பட 5 பேருக்கு விளையாட்டு போட்டிக்கான உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29-ம் தேதி காணொலி மூலம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி வழங்க உள்ளார்.
கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழக வீரர் மாரியப்பனுக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி வெளியிட்ட டுவிட்டரில்‘‘கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள, உலக அளவில் பாரா தடகள போட்டிகளில் பல சாதனைகள் புரிந்த, நம் மண்ணின் மைந்தர் மாரியப்பன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்’’ என பதிவிட்டுள்ளார்.