திருவண்ணாமலையில் பெண்களுக்கு கருக்கலைப்பு: கணவன்-மனைவி கைது

திருவண்ணாமலையில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த தம்பதியரை போலீசார் கைது செய்தனர். #IllegalAbortionCenter
கைதான தமிழ்செல்வன்-ஆனந்தி
கைதான தமிழ்செல்வன்-ஆனந்தி
Published on

பெண்ணாக பிறந்தால் தங்களுக்கு பாரம் என்று கருதும் பெற்றோர் கருவிலேயே அது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து கருக்கலைப்பு செய்து விடுகிறார்கள்.

இதனால் நாட்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து கருவிலேயே ஆணா, பெண்ணா என்று கண்டு பிடிப்பது குற்றம் என்று மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது.

ஆணா, பெண்ணா என கண்டு பிடித்து கருக்கலைப்பு செய்தால் ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை அனைத்து ஸ்கேன் சென்டர்களிலும், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருத்துவமனைகளில் அறிவிப்பாக ஒட்டுவதற்கும் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் திருவண்ணாமலையில் ஒரு ஸ்கேன் சென்டரில் பெண்ணின் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று கண்டு பிடித்து பெண் கருவை கலைத்து வந்தது தெரியவந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

திருவண்ணாமலை வேங்கிக்கால் என்ற இடத்தை சேர்ந்தவர் டாக்டர்ஆனந்தி. இவர் தனது வீட்டிலேயே ஸ்கேன் சென்டர் வைத்து நடத்தி வந்தார். இங்கு கர்ப்பிணிகளின் கருவில் உள்ள குழந்தையை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து சொல்வதாகவும் பெண் என்றால் கருக்கலைப்பு செய்வதாகவும் சென்னை சுகாதார பணிகள் இயக்குனருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து ஆனந்தியின் செயல்பாடுகளையும், பரிசோதனை மையத்தையும் சென்னையில் இருந்து சென்ற சுகாதார குழுவினர் அங்கு முகாமிட்டு கடந்த ஒரு வாரமாக ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது அங்கு கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இரவு நேரங்களில் மட்டுமே அவர் இதுபோன்ற சட்டவிரோத கருக்கலைப்பு செய்து வந்ததால் பொறி வைத்து கையும் களவுமாக பிடிக்க சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இதற்காக கர்ப்பிணி ஒருவரை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அவரிடம் ரூ.6 ஆயிரம் கொடுத்து டாக்டர் ஆனந்தி வீட்டுக்கு கருக்கலைப்பு செய்ய ரகசியமாக அனுப்பி வைத்தனர்.

அதன்படி அந்த பெண் ஆனந்தி வீட்டுக்கு சென்றார். அங்கு கருக்கலைப்பு செய்ய டாக்டர் ஆனந்தி நள்ளிரவில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் மாநில ஆய்வுக்குழு கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகரன், நுன்கதிர் டாக்டர் நடராஜன், திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பாண்டியன் உள்ளிட்ட குழுவினர் அங்கு புகுந்து திடீர் சோதனை நடத்தினர்.

அங்கு அனுமதியின்றி வைத்திருந்த ஸ்கேன் கருவியை பறிமுதல் செய்தனர். அங்குள்ள ரகசிய பாதாள அறையில் வைத்து கருக்கலைப்பு செய்ய முயன்றபோது ஆனந்தி அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கினார்.

இதையடுத்து அதிகாரிகள் ரகசிய பாதாள அறையில் சோதனை செய்தனர்.

அங்கிருந்த ஸ்கேன் அறிக்கைகளை ஆய்வு செய்தனர். அதில் பெண்களின் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதற்கான பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு இருந்த பல்வேறு அறிக்கைகள் இருந்தன. மேலும் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்களும் சிக்கியது.

ஆனந்திக்கு உடந்தையாக அவரது கணவர் தமிழ் செல்வன் மற்றும் ஆட்டோ டிரைவர் சிவக்குமார் செயல்பட்டு வந்தனர். அதிகாரிகள் அவர்கள் இருவரையும் பிடித்து திருவண்ணாமலை போலீசில் ஒப்படைத்தனர். வீட்டில் தனியாக செயல்பட்டு வந்த பரிசோதனை மையத்திற்கும் சீல் வைத்தனர்.

சிவக்குமார் இங்கு வரும் பெண்களை பஸ் நிலையத்தில் இருந்து அழைத்து வருவது, திரும்ப அவர்களை அங்கு கொண்டு போய் விடுவது மற்றும் புரோக்கர்போல் செயல்பட்டு வந்தார்.

கருக்கலைப்பு செய்யும் பெண்களிடம் ரூ.50 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளனர். முறைகேடாக கர்ப்பம் தரித்த பெண்களின் கருவை கலைக்கவும், பெண் சிசு கருவை கலைக்கவும், அதிகமாக பணம் வசூல் செய்துள்ளனர்.

ஆட்டோ டிரைவர் சிவக்குமார்.

இந்த 3 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தி ஏற்கனவே இதுபோன்று குழந்தைகள் ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து சட்டவிரோத கருக்கலைப்பு நடத்தியதாக கைது செய்யப்பட்டவர் என தெரியவந்தது.

அவர் ஜாமீனில் வெளியில் வந்து மீண்டும் தனது வீட்டிலேயே ரகசியமாக ஸ்கேனிங் மையம் நடத்தி வந்துள்ளார்.

திருவண்ணாமலையில் இதுபோன்று புகார்கள் ஏற்கனவே நிறைய வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் அதிகாரிகள் சோதனை நடத்தி கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கூறிவந்த 3 ஸ்கேன் மையத்திற்கு சீல் வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com