நிலத்தடி வழியாக மின்பாதை அமைக்கும் பணி தொடக்கம்

திருப்பூர் ரெயில் நிலையம் முன் நடை மேம்பாலம் அமைப்பதற்காக நிலத்தடி வழியாக மின் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மின் பாதை அமைப்பதற்காக குழி தோண்டும் பணி நடந்து வருவதை படத்தில் காணலாம்.
மின் பாதை அமைப்பதற்காக குழி தோண்டும் பணி நடந்து வருவதை படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகர பகுதியில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ரெயில் நிலையம், புஷ்பா ரவுண்டானா, மாநகராட்சி அலுவலகம், உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்கள் ரோட்டை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாநகரின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் பொதுமக்கள் ரோட்டை எளிதாக கடந்து செல்லும் வகையில் ஆங்காங்கே நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்கு தேவையான இரும்பு தூண்கள் கொண்டுவரப்பட்டு முதற்கட்டப் பணி வேகமாக தொடங்கியது. ஆனால் திடீரென இந்த பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் திருப்பூர் ரெயில் நிலையம் அருகே நடை மேம்பாலம் அமைப்பதற்கான பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

ஆனால் ஊரடங்கு காரணமாக ரெயில் நிலையம் முன் நடந்து வந்த பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பாலம் அமைய உள்ள இடத்தில் ரோட்டோரம் இருக்கும் மின் கம்பிகள் இடையூறாக இருப்பதால் இந்த மின் பாதையை குறிப்பிட்ட தூரத்திற்கு நிலத்தடி வழியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான குழி தோண்டும் பணி நேற்று தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகிறது. இது நிறைவடைந்த பின் விரைவில் பாலம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com